விஐபி-2, விவேகம், வேலைக்காரன் படங்களுக்கு புதிய சிக்கல்-தணிக்கை குழு கெடுபிடி !

விஐபி-2′ படத்தை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது ‘விஐபி-2’ படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். 
‘விஐபி-2’ படம் மட்டுமல்ல, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்ட அஜித் நடித்துள்ள விவேகம் படமும் சில வாரங்கள் தள்ளிப்போகிறது. அனேகமாக செப்டம்பர் மாதத்துக்கு விவேகம் தள்ளி வைக்கப்படலாம்.
அது மட்டுமல்ல, சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியும் சில வாரங்களுக்கு தள்ளிப்போகிறது. இந்த படங்கள் மட்டுமின்றி அடுத்த மாதங்களில் வரிசைகட்டி நின்ற ஏராளமான படங்களும் பின்வாங்குவதை தவிர்க்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 
இத்தனை படங்களும் தள்ளிப்போனதற்கு என்ன காரணம்? தணிக்கைக்குழுவை கையைக்காட்டுகிறார்கள் திரைப்படத்துறையினர். முன்பெல்லாம் தணிக்கைக்குழுவினர் படம் பார்க்க படத்தை அனுப்பினால் ஓரிரு நாட்களில் படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் வழங்குவார்கள்.
சில தயாரிப்பாளர்கள், தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அல்லது சில்லறையை வீசி தாங்கள் விரும்பிய நேரத்தில் படம் பார்க்க வைத்து சான்றிதழ் பெற்றனர். இந்த நடைமுறைக்கு ஆப்பு வைத்துவிட்டார் தற்போதைய தணிக்கை அதிகாரி.
இனி ஆன்லைன் மூலமே படங்களை தணிக்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும், தணிக்கைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வரிசைப்படி மட்டுமே தணிக்கைக்குழுவினர் படத்தை பார்ப்பார்கள் என்ற முறை அமலுக்கு வந்துவிட்டது. இது தவிர ஏராளமான புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நடைமுறை ஒரு பக்கம், சென்னை மண்டலத்தின் தணிக்கை அதிகாரியின் கெடுபிடி இன்னொரு பக்கம்…. இந்தப் பிரச்சனை காரணமாகவே பல படங்கள் திட்டமிட்ட தேதியிலிருந்து சில வாரங்கள் கழித்தோ சில மாதங்கள் கழித்தோ திரைக்கு வரும் சூழல் உருவாகிவிட்டது.
author avatar
Castro Murugan

Leave a Comment