கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி !11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா !

கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி !11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா !

கர்நாடகாவில்  11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார்.

நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.இதனால் முதலமைச்சராக குமாரசாமி இருந்து வருகிறார்.

தற்போது பாஜகவிற்கு  105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 37 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும்  எம்எல்ஏக்களாக உள்ளனர்.

காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கர்நாடகாவில்  11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர் . பிசி பாட்டீல், ரமேஷ் ஜர்கிஹோலி, விஸ்வநாத், நாராயண் கவுடா, சிவராம் ஹெப்பர் மகேஷ் குமதள்ளி, கோபாலய்யா, பிரதாப் கவுடா பாட்டீல் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர் .இதனால் அங்கு ஆளும் குமாரசாமி ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.

மேலும் இது தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில்,தனிப்பட்ட காரணங்களால் சட்டப்பேரவைக்கு வர முடியாத நிலையில், 11 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.ராஜினாமா கடித விவரங்களை திங்கள்கிழமையன்று பார்ப்பேன் என்றும் க கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube