100வது பிறந்தநாளை கொண்டாடும் RMIT பல்கலைக்கழகம்…!

மெல்போர்ன் : வெளிநாடுகளில் சென்று படித்து தன் கல்வித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும், வாழ்வை வளமாக்கிக்கொள்ளவும் நினைக்கக்கூடிய மாணவர்களுக்கும், அதற்குத் துணையாக நிற்கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்ட வேண்டும் என்பதே இந்தப் பகுதியில் வரும் கட்டுரையின் நோக்கம்.

அந்தவகையில் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி ஏராளமான தகவல்களை வழங்கிவந்தோம். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இனி கடைசியாக 10வது இடத்தில் இருக்கும் Royal Melbourne Institute of Technology-RMIT பல்கலைக்கழகம் பற்றியும், அதன் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றைப் பார்ப்போம். 

உலகத்தில் மனிதர்கள் அதிகம் வாழ தகுதியான இடங்களின் பட்டியலில் முதல் வரிசையைப் பெற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் 1887ம் ஆண்டு பிரான்சிஸ் ஆர்மன்ட் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் Royal Melbourne Institute of Technology பல்கலைக்கழகம். ஆஸ்திரேலிய மக்கள் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாக இன்னொரு பெயரும் கொண்ட இக்கல்வி நிறுவனமானது 320 வர்த்தக மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் உள்ள தன் கிளைக் கல்லூரிகளையும் சேர்த்து 83,000 மாணவர்கள் தொழில்முறைப் படிப்புகளிலும், உயர்கல்வியிலும் படிக்கின்றனர். மேலும் 2015ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஆண்டு வருவாயாக 1.163 பில்லியன் டாலர்களை ஈட்டி ஆஸ்திரேலியாவின் வசதியான கல்விநிறுவனங்களில் முதன்மையானதாக விளங்குகிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளாக Various disciplines in Bachelors Degree, Art, design and architecture, Business, Communication and digital media, Computing, games and information technology, Education and teaching, Engineering, Environment and sustainability, Health and biomedical sciences, International and community services, Justice and legal, Science ஆகிய பாடத்திட்டங்களும், முதுநிலைப் பட்டப்படிப்பில் Arts & Humanities, Engineering & Technology, Life Sciences & Medicines, Natural Science, Social Sceince & Management ஆகிய பாடத்திட்டங்களும் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.

போக்குவரத்து, ரெஸ்ட்டாரன்ட்ஸ், தியேட்டர் என அனைத்து வசதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் தகுந்த இடமான மெல்போர்ன் நகரின் இதயத்தில் இதன் கல்லூரி வளாகமானது அமைந்துள்ளது. உலக அரங்கில் கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்தியும், வேலை சம்பந்தமான அனுபவங்களுக்கு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்களை ஈடுபடச் செய்தும், படித்த கருத்தியல் விளக்கங்களை வேலை நிறுவனங்களில் இருக்கும் நடைமுறை செயல்பாடுகளுடன் பொருத்திப் பார்த்தும் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படச் செய்கிறது. பி.எம்.டபிள்யூ, அடிடாஸ், லோரியல் போன்ற உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்களின் பங்களிப்போடு நடத்தப்படும் இக்கல்வி நிறுவனமானது உலகத்தின் முதல் நூறு தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஒன்றாக உள்ளது.

மேலும் ஆராய்ச்சியிலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் வழங்குவதிலும், உள்கட்டமைப்பிலும் உலக அளவில் தரமாக செயல்படும் பல்கலைக்கழகங்களின் பட்டியலிலும் முதன்மை இடத்தைப் பிடித்திருப்பது இக்கல்வி நிறுவனத்தின் மற்றுமொரு சிறப்பு. நூறு வருடங்களைக் கடந்து நிற்கும் இக்கல்வி நிறுவனம் உலகத் தரத்தில் மாணவர்களை உருவாக்கி உலகத் தரத்தை மிஞ்சும் விதமாக எல்லா வகையிலும் செயல்பட்டு அனைத்து கல்வியாளர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு மற்ற நாடுகளோடு பார்ட்னர்ஷிப் முறையில் இயங்கும் தன் கிளைக் கல்லூரிகளுக்கு மாணவர்களை உயர் படிப்புக்காகவும், தொழில்முறைப் படிப்புக்காகவும் அனுப்புகிறது. இப்படியாக ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்றுள்ளன.அடுத்த இதழில் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக விசா, பாஸ்போர்ட், தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பற்றி பார்ப்போம். 

author avatar
Castro Murugan

Leave a Comment