வாலிபர் அடித்துக் கொலை – மன்னிப்பு கேட்ட காவல்துறை..!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியில் உள்ள பாஜீரா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் காசிம் (45). இவரது நண்பர் சமைதீன் (55). இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை அவர்களது வயலுக்கு சென்றபோது அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவையும் கன்றுக்குட்டியையும் விரட்டியடிக்க முயன்றனர்.

அப்போது அந்த பகுதியாக வந்த சிலர், இருவரும் பசுவை கொலை செய்ய போவதாக நினைத்து வதந்தி பரப்பியதால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஒரு கும்பல் தடியுடன் வந்தது. அவர்களிடம் விசாரணை எதுவும் நடத்தாமல் கடுமையாக தாக்கியது. இதனால் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அப்போது தங்களை தாக்கிய கும்பலிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு யாரும் தண்ணீர் தரவில்லை. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் காசிம் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் சமைதீன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்ததும் காசிம் மற்றும் சமைதீனின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் கும்பலிடம் இருந்து சமைதீனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இ.பி.கோ. 307 (கொலை முயற்சி), 302 (கொலை) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு போலீஸ் வந்த பின் காசிமை அப்பகுதி மக்கள் தரையில் இழுத்து வருகின்றனர். போலீசார் கண்முன் நடக்கும் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உ.பி. காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அந்த புகைப்படத்தில் உள்ள 3 போலீசாரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த புகைப்படம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சில நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. அதனால் தான் இவ்வாறு தூக்கிச் செல்லப்பட்டார். இருப்பினும் போலீசார் கவனக்குறைவாக நடந்துள்ளனர் என டி.ஜி.பி. தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment