யார் கடிதம் அளித்தாலும் கோயில் பஜனை நடத்த அனுமதி வழங்குவீர்களா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி….!!

யார் கடிதம் அளித்தாலும் கோயில் பஜனை நடத்த அனுமதி வழங்குவீர்களா என மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
தஞ்சை பெரிய கோயிலில் தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தால் கோயிலின் பாரம்பரியம் கெடும் எனவே அதற்கு தடை விதிக்க, வேண்டும் எனக்கோரி கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது குறித்து, விளக்கமளிக்க மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இன்று நடைபெற்ற விசாரணையில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பஜனை என தனிநபர் யார் கேட்டாலும் அனுமதி கொடுத்து வழங்குவீர்களா என கேள்வி எழுப்பினர்.
கோயில் கட்டுப்பாடு முழுவதும் தொல்லியல் துறையிடம் தான் உள்ளது என்பதால் பஜனை என்ற பெயரில் அனுமதி கொடுத்தோம் என்று தொல்லியல் துறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல எனக்கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment