மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!கூடங்குளத்தில் 2 அணுஉலைகளிலும் மின்உற்பத்தி நிறுத்தம்..!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு, மின்உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் அணுஉலை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 11–ந் தேதியன்று முதல் அணுஉலை செயல்பட தொடங்கியது. அதனை தொடர்ந்து படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் முதல் அணுஉலையின் வால்வு பகுதியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மின்உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. முதல் அணுஉலை நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 19–ந் தேதி 2–வது அணு உலை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 2 அணுஉலைகளும் இயங்க வில்லை. இதனால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1,125 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment