மலப்புரத்தில் பெண் தபால் அதிகாரியிடம் ரூ.4 லட்சம் பணம் பறித்த வாலிபர்..!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரில் உள்ளது தலைமை தபால் அலுவலகம். நேற்று மதியம் பெண் அதிகாரி பார்கவி மற்றும் உதவி அதிகாரி சுரேந்திரன் ஆகியோர் டெபாசிட்தாரர் ஒருவருக்கு கொடுக்க ரூ.4 லட்சத்தை எண்ணி மேஜை அருகே வைத்தனர். டெபாசிட் தாரர் அவசரம் என்று கேட்டதால் சாப்பிட கூட செல்லாமல்அவருக்காக காத்திருந்தனர்.

அப்போது தொப்பி அணிந்த ஒரு வாலிபர் தபால் அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த ஊழியர்கள் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்தனர். அதையும் மீறி அந்த வாலிபர் உள்ளே சென்றார்.

பெண் அதிகாரி பார்கவியிடம் தனக்கு பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாருங்கள் என்று கேட்டார். மனம் இரங்கிய அதிகாரி தனது பேக்கில் இருந்து ரூ.20 எடுத்தார். உதவி அதிகாரி சுரேந்திரன் ஒரு தபாலை எடுக்க முயன்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர் மேஜையில் இருந்த ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சத்தம் போட்டனர். உஷாரான ஊழியர்கள் வாலிபரை மடக்கிப்பிடிக்க தயாரானார்கள். ஆனால் அவர்களால் வாலிபரை பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து மின்னல் வேகத்தில் வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து திரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தபால் அலுவலகம் எதிரே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் தொப்பி அணிந்த வாலிபர் உள்ளே நுழைவதும், சிறிது நேரத்தில் அவர் வெளியே தப்பி ஓடுவதும் பதிவாகி உள்ளது. கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் கொள்ளையனை தேடி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் மஞ்சேரி தபால் துறை சூப்பிரண்டு அனில்குமார் திரூர் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment