பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேச்சு:எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் கைது!

காவல்துறையினர் , சென்னை மயிலாப்பூரில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தனர்.

நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக வெளியிட்டிருந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவரது பதிவு ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில்  இருப்பதாக கூறி அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.வி.சேகர் வீடு மீது கற்கள் வீசப்பட்டன.

இதையடுத்து, காவல்துறையினர் பத்திரிகையாளர்களைக் கைது செய்து, பட்டினப்பாக்கத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சென்ற பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment