சபரிமலை போராட்டம் நல்ல வாய்ப்பு…பா.ஜனதா தலைவர் மீது வழக்குப்பதிவு..!!

சபரிமலை போராட்டம் நல்ல வாய்ப்பு…பா.ஜனதா தலைவர் மீது வழக்குப்பதிவு..!!

சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்ற பா.ஜனதா தலைவருக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அக்டோபர் 19-ல் இரு பெண்கள் சன்னிதானம் வரையில் சென்ற போது தந்திரிகளும் பக்தர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு, பெண்கள் பிரவேசிக்கும் நிலை ஏற்பட்டால் கோவில் நடையை சாத்துவேன் என்றார். கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கோழிக்கோடுவில் பா.ஜனதா இளைஞர் அணியிடம் பேசியது தொடர்பான வீடியோ வைராகியது.
 ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். பா.ஜனதா திட்டத்தின்படிதான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, சில பெண்கள் அங்கு சென்றபோது நடையை அடைக்கப்போவதாக தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார். என்னிடம் ஆலோசனை செய்துவிட்டுதான் அப்படி அறிவித்தார். கண்டரரு ராஜீவரு நடை சாத்தப்படும் என்றால் நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா? என்று கேட்டார். அவமதிப்பு ஆகாது, அது நீதிமன்ற அவமதிப்பு என்றால் எனக்கும் பொருந்தும், பா.ஜனதா தொண்டர்கள் அனைவருக்கும் பொருந்தும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். பா.ஜனதா உங்கள் பின்னால் இருக்கிறது என்றேன். அதன்பின்னர்தான் தந்திரி கண்டரரு ராஜீவரு தைரியமாக அறிவித்தார். அதன்பின்னர்தான் போலீஸ் பின்வாங்கியது. கோயிலுக்குள் பெண்கள் வராமல் தடுக்கப்பட்டனர் என்று கூறினார்.
இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
ஆனால் கேரளா ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ள ஸ்ரீதரன் பிள்ளை, தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார். நான் ஒரு வழக்கறிஞர், என்னிடம் எல்லோரும் ஆலோசனையை கேட்பார்கள். அதன்படிதான் தந்திரியும் ஆலோசனையை கேட்டார் என்றார்.
சிபிஎம், காங்கிரஸ் கண்டனம்
பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையின் பேச்சுக்கு ஆளும் இடதுசாரி கூட்டணியிடம் இருந்தும், எதிர்க்கட்சியான காங்கிரசிடம் இருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. சிபிஎம் கட்சியின் மாநில செயலாளார் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசுகையில், இது மிகவும் முக்கியமான விவகாரம். உயர்மட்ட அளவில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சபரிமலையில் நடக்கும் ஒவ்வொரு விவகாரத்திற்கு பின்னாலும் பா.ஜனதாவின் சதிதிட்டம் உள்ளது என்று குற்றம் சாட்டினார். அமைச்சர் ஜெயராஜன் பேசுகையில், சபரிமலையில் பிரச்சனையை ஏற்படுத்த தந்திரிகளையும் பயன்படுத்துகிறார்கள் என்றார். பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், பா.ஜனதாவின் உண்மையான முகம் வீடியோ மூலம் வெளியாகிவிட்டது என்றார்.
போலீஸ் வழக்குப்பதிவு
இதற்கிடையே கோயிலை மூட பா.ஜனதா தலைவரிடம் அனுமதி கேட்டது ஏன்? என்று கோவிலின் தந்திரியிடம் தேவசம்போர்டு நிர்வாகிகள் விளக்கம் கோரியுள்ளனர். இப்போது ஸ்ரீதரன் பிள்ளை மீது கேரள போலீஸ் ஐபிசி 505 1(பி) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஸ்ரீதரன் பிள்ளை கருத்து சமூகத்தில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *