நீரவ்மோடி ஸ்டைலில் மோசடி!வங்கி மோசடி வழக்கில் சிறையில் இருந்த நகைக்கடை அதிபர் ஜாமினில் வந்ததும் தலைமறைவு!

14 வங்கிகளை 824 கோடி ரூபாய்க்கு  சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம், மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐ-யிடம் 14 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக  புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு உஸ்மான் சாலை பகுதியில் கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தை உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் என்பவர் நடத்தி வருகிறார். இவர், வங்கிக்காக கடந்த 2007ல் ரூ.50 கோடியை  ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு அந்த கடன் தொகையை  எஸ்.பி.ஐ. வங்கிக்கு மாற்றியுள்ளனர்.

Related image

எஸ்.பி.ஐ. வங்கியில், தங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் அதிக லாபம் வருவதாகக் கூறி கூடுதலாக கடன் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. எஸ்.பி.ஐ.வங்கி மட்டுமல்லாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிண்டிகேட் வங்கி, உள்ளிட்ட 14 வங்கிகளில் கடந்த 2007 முதல் 2017 வரை ரூ.750 கோடி வரை கடனாக பெற்று ஏமாற்றி வந்துள்ளதும் தற்போது வெளிவந்துள்ளது. .

கடந்த 2017 அக்டோபர் மாதம் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயினை, கலால் வரி கட்டாத மோசடியில் சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரூ.20 கோடி மோசடி செய்ததற்கான காரணம் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போதுதான், கனிஷ்க் நிறுவனத்தின் மோசடி தெரியவந்தது. அவர் வங்கிகளில் பெற்ற கடனுக்கும் வட்டி கொடுக்காமல் ஏமாற்றி வந்த அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

இதன் பின்னரே, கனிஷ்க் நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்ட வங்கிகள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி எஸ்.பி.ஐ. வங்கியின் மத்திய கார்ப்பரேட் குழுவின் சென்னை மண்டல பொது மேலாளர் சந்திரசேகர் தலைமையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்தில் 16 பக்கம்  அடங்கிய புகாரை அளித்துள்ளனர்.

இது குறித்து சந்திரசேகரிடம் கேட்ட போது கனிஷ்க் நிறுவனம் கடந்த ஆறு மாதங்களாக செயல்படவில்லை எனவும், தி.நகரில் அதன் தலைமை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அந்நகைக்கடையின் கிளைகளும் மூடப்பட்டுள்ளது என்றும் கூறினார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஸ்குமார் ஜெயின் ஜீ.எஸ்.டி.துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த பிறகு அவர் எங்குள்ளார் என்ற விவரமும் தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.11,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி போன்று,  சென்னையிலும் அதே பாணியில் பூபேஸ்குமார் ஜெயின் என்பவர் ரூ.824 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கனிஷ்க் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னையில் கனிஷ்க் நிறுவனம் உள்ள இடங்களில் சிபிஐ சோதனை தொடங்கியுள்ளது. மேலும் கனிஷ்க்  நிறுவன இயக்குனர்களுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment