தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் மனு:3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமித்தது உச்சநீதிமன்றம்!

தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக  எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு அளித்தனர்.

இதனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால் அவர்களில் ஜக்கையனை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கவில்லை. எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டு, கடந்த 14-ந்தேதியன்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி விமலா நியமிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சார்பில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், சுப்ரீம் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு முன்பு மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி, 17 பேரின் மனுக்களையும் அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அப்போது அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு விசாரித்ததில் பெரும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு 4 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த பிறகு, தீர்ப்பு வழங்க 6 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே, இந்த வழக்கு 10 மாதங்கள் நடைபெற்று இருக்கிறது.

இந்த வழக்கில் இரு நீதிபதிகளால் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 3-வது நீதிபதி நியமிக்கப்பட்டு உள்ளார். இது மேலும் தாமதம் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், காலியாகும் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேல் ஆகிறது.

சென்னை ஐகோர்ட்டு இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த தடை விதித்து இருப்பதால், அங்கு தேர்தல் நடத்தவும் வழி இல்லை. இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது ஆகும். இதனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த வழக்கின் அவசரத்தன்மையை கருத்தில் கொண்டு இதனை உடனடியாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

அதன்படி இன்று  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு பொறுப்பற்ற முறையில் உள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியே முடிவெடுப்பார் என்றும் தேவைப்பட்டால் மூன்றாவது நீதிபதியை உச்ச நீதிமன்றமே நியமிக்கும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தகுதி நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுவளித்த 17 எம்.எல்.ஏக்களும் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர். மேலும், இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூன்றாவது நீதிபதியாக விமலாவை உயர் நீதிமன்றம் நியமித்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது உச்ச நீதிமன்றம் மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணாவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment