ஜார்க்கண்டில் பட்டினியால் 2 பேர் மரணம் – விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர்..!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் இத்கோரி வட்டத்தைச் சேர்ந்தவர் மீனா முஷார் (வயது 45). இவர் தெருவோரம் கிடக்கும் பழைய பேப்பர், பிளாஸ்டிக்குகளை சேகரித்து விற்பனை செய்து அதன்மூலம் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த திங்கட்கிழமையன்று திடீரென இறந்துவிட்டார்.

அவர் கடந்த நான்கு நாட்களாக வருமானம் எதுவும் இல்லாமல் சாப்பிடவில்லை என்றும், பட்டினியால் அவர் இறந்துவிட்டதாகவும் அவரது மகன் கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதேபோல் முன்னதாக, கிரிடி மாவட்டம் மங்கர்காடி கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி தேவி (வயது 65) என்ற மூதாட்டி சனிக்கிழமை பட்டினியால் இறந்துள்ளார். அவருக்கு ரேசன் கார்டு கிடையாது. முதியோர் பென்சனும் கிடைக்கவில்லையாம். பிள்ளைகள் பிழைப்பு தேடி வெளியூர் சென்ற நிலையில், பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த சாவித்திரி தேவி, கடந்த சில தினங்களாக சாப்பாடு எதுவும் இல்லாமல் இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த இரு பட்டினி மரணங்கள் குறித்தும் அரசின் கவனத்திற்கு தெரியவந்ததும், இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி முதல்வர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டுள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment