சிபிஎஸ்இ தமிழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள் நினைவு மண்டபம் அமைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, “தமிழ்நாட்டு மாணவர்கள் காப்பியடிப்பதில் தீவிரமானவர்கள் என்பதாக கொச்சைப்படுத்தி, நீட் தேர்வின்போது அவர்களை அவமானப்படுத்தும் வகையில் சோதனையிட்ட விதத்தைக் கண்டு பெற்றோர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் வேதனையில் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். சிபிஎஸ்இ இதையெல்லாம் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும், தனது செயல்பாடுகளுக்காக தமிழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை.

ஒட்டுமொத்தமாக, சிபிஎஸ்இ வாரியத்தின் இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதுமட்டுமல்ல, நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டிஎம்சி தண்ணீர் உடனே வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும், தர முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது ஒன்றும் புதிதல்ல. தொடர்ந்து கர்நாடக அரசு இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், உடனே 4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசும், கர்நாடக அரசும் அந்தத் தீர்ப்பைக் கண்டும் காணாமல் இருக்கின்றன. இதனைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.

உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, அவர்தான் முதல் குற்றவாளி என்று தண்டனை பெற்றவர். அப்படிப்பட்டவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள், ஊழல் செய்து சிறைக்கு சென்றவருக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டுகிறது” என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment