சிகிச்சைக்காக சென்னை வந்த மாலத்தீவு எம்.பி.க்கு அனுமதி மறுப்பு – இந்தியாவிடம் விளக்கம் கேட்பு..!

மாலத்தீவில் அப்துல்லா யாமீன் தலைமையில் அதிபர் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி. அகமது நிகன். இவர் மருத்துவ காரணங்களுக்காக கடந்த திங்கட்கிழமை இரவு சென்னை வந்தார்.

இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு வழியாக இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். ஆனால் அவரை அனுமதிக்க குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவரது டிப்ளோ மேட்டிக் பாஸ்போர்ட் குறித்து விசாரணை செய்த பிறகு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த விமானத்தில் இந்தியாவை விட்டு செல்லுமாறும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு பிறகு அகமது நிகன் எம்.பி. இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மாலேவுக்கு சென்றார்.

அகமது எம்.பி. அதிபர் அப்துல்லா யாமினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். பாராளுமன்ற குழுக்களுக்கு பி.பி.எம். கட்சியின் தலைவராக உள்ளார்.

மாலத்தீவு எம்.பி.யை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரி அகிலேஷ் மிஸ்ராவிடம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறியதாவது:-

இது துரதிருஷ்டவசமானது. அகமது நிகன் எம்.பி. மருத்துவ பரிசோதனைக்காக சென்னைக்கு அடிக்கடி சென்று வருவார். அவரை அனுமதிக்க மறுத்தது எதிர்பாராத ஒன்றாகும். அதிபர் யாமினின் சகோதரி, மைத்துனர் ஆகியோருடன்தான் அவர் சென்றார். அவர்களை மட்டும் செல்ல அனுமதித்து உள்ளனர். நிகனுக்கு அனுமதி மறுத்ததற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அகமது நிகன் எம்.பி. கூறும் போது அனுமதி மறுத்தது மிகவும் கொடுமையானது. அண்டை நாடான இந்தியா இது மாதிரியான கொள்கையை நடைமுறைபடுத்துவதால் எந்த பயனும் இல்லை என்றார்.

இந்தியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக எம்.பி.யின் ஆதரவாளர்கள் மாலேயில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சிறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment