சர்க்கார் படத்துக்கு தடை…நீதிமன்றத்தில் இன்று விசாரணை…!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று ‘சர்கார்’ படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தடை வேண்டும்
இந்த நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், ‘செங்கோல்’ என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையை திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, ‘சர்கார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார்.
அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கு மனுவை எதிர்தரப்பினருக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.
DINASUVADU
author avatar
Dinasuvadu desk

Leave a Comment