சபரிமலை விவகாரத்தில் சுரேந்திரன் கைது….!!

கேரள மாநில பா.ஜ.க. பொது செயலாளர் சுரேந்திரனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி இன்று எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கடந்த மாதம் 17ந்தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அய்யப்ப பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அப்போது கடும் மோதலும் ஏற்பட்டது.
இந்த நிலையில் 2 மாத கால மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு நடையை திறந்தார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று கோ‌ஷங்களை எழுப்பினர். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு கோவில் நடை திறக்கப்படுவது இது 3வது முறையாகும்.
அத்தாழ பூஜை முடிகிற அடுத்த மாதம் 27ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். பிறகு நடை மூடப்படும். பின்னர் மகர விளக்கிற்காக டிசம்பர் 30ந்தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 14ந்தேதி மகர விளக்கு பூஜைக்கு பின்பு ஜனவரி 20ந்தேதி கோவில் நடை மூடப்படும்.இதற்கிடையே, இருமுடிகட்டுடன் சபரிமலைக்கு வந்த கேரள மாநில பா.ஜ.க. பொது செயலாளர் சுரேந்திரனை நிலக்கல்லில் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.  அவருடன் சென்ற 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.  இந்த நிலையில், போலீசார் அவரை மாஜிஸ்திரேட் முன் இன்று ஆஜர்படுத்தினர்.  இதில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து பா.ஜ.க. இன்று எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கிறது.  இதனை தொடர்ந்து கேரளாவின் நெடுஞ்சாலைகளில் இன்று வாகனங்களை செல்ல விடாமல் மறித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment