கருணை கொலை செய்யுங்கள்: ஈரோடு கலெக்டரிடம் 2 திருநங்கைகள் கண்ணீர் மனு..!

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஓவியா, அனு என்ற 2 திருநங்கைகள் கையில் ஒரு மனுவுடன் கண்ணீருடன் வந்தனர்.

கண்ணீர் சிந்தியபடி கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன் நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்தி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் எங்களை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம போலீசில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கேட்டால் போலீசார் எங்களை தரக் குறைவாக பேசுகிறார்கள்.

மேலும் எங்கள் உறவினர் மீது உள்ள ஒரு வழக்கு தொடர்பாகவும் எங்களுக்கு போலீசார் ரொம்பவும் டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

போலீசார் கொடுக்கும் டார்ச்சரால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆகவே எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த 2 திருநங்கைகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுக்க வந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment