கபினி அணை நீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும்..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைத்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியதால் அணையில் இருந்து பாகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்து கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை பெய்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

நேற்று முன்தினம் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. இதனால் காலை முதல் நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.5 அடியாக இருந்தது. அணைக்கு 7 ஆயிரத்து 776 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,045 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து இன்று இரவு ஒகேனக்கலுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் 8 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் நாளை காலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் உடலில் எண்ணெய் தேய்த்து சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். உற்சாகமாக படகு சவாரியும் சென்றனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 586 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2,618 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 50.32 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 50.59 அடியாக இருந்தது.

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment