எம் பாஸ்போர்ட் செயலியில் எப்படி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வேண்டும்?இதோ விவரம்

செல்ஃபோன் மூலமே  பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள எம் பாஸ்போர்ட் சேவா செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல் முறை விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், மொபைல் ஆப் (Mobile App) மூலமாகவே, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, எளிதில் பெறும் வகையில் எம்.பாஸ்போர்ட் சேவா என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தார். அந்த செயலி மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என பல கட்டங்களாக விளக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக செயலியில் உள்ள நியூ யூசர் (New User) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்

அடுத்து வரும் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் மனுதாரருக்கு உரிய பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த அலுவலகம் அமைந்துள்ள நகரம் மனுதாரரின் அனைத்து அரசு ஆவணங்களும் பதிவு பெற்ற நகரமாக இருக்க வேண்டும். மனுதாரர் வசிக்கும் மண்டலத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் இல்லை என்றால், வேறு எந்த பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து மனுதாரரின் பெயர், ஈ மெயில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதனைத் தொடர்ந்து மனுதாரரின் யூசர் நேம் (User Name) மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கக் கோரப்படும்.

5-வதாக ஒரு பாதுகாப்புக் கேள்வி கேட்கப்பட்டு அதற்கான பதில் பதிவு செய்துகொள்ளப்படும். இது பாஸ்வேர்டை மறந்துவிடுதல் உள்ளிட்ட நேரங்களில் செயலிக்குள் செல்ல உதவும்

அடுத்ததாக கேப்ச்சா கோட் (CAPTCHA code) எனப்படும் சரிபார்ப்புக் குறியீட்டை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்

அதனைத் தொடர்ந்து செயலியில் இருந்து வெளியேறி மனுதாரரின் ஈ மெயில் முகவரிக்கு சென்றால் அதில் வெரிஃபிகேஷன் லிங்க் ((Verification link)) அனுப்பப்பட்டிருக்கும். அந்த லிங்க்கை தேர்வு செய்தால், பாஸ்போர்ட் இணையதளப் பக்கத்துக்கு செல்லும். அதில் மனுதாரரின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி எம் பாஸ்போர்ட் செயலியின் பயனர் பக்கத்துக்கு செல்ல முடியும்

அதில் அப்ளை ஃபார் ஃப்ரெஷ் பாஸ்போர்ட் (Apply for fresh passport) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சப்மிட் செய்வதோடு விண்ணப்பிக்கும் நடைமுறை முடிவடைகிறது. அப்போது ஒரு குறியீடு கொடுக்கப்படும். அந்தக் குறியீட்டை பயன்படுத்தி பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பான அடுத்தடுத்த கட்ட நிலையை தெரிந்துகொள்ள முடியும்

Leave a Comment