ஊதிய உயர்வு வழங்க கோரி!நெல்லையில் வங்கி ஊழியர் சங்கத்தினர் 2 நாளாக ஆர்ப்பாட்டம்!

ஊதிய உயர்வு ஒப்பந்தம் வங்கி ஊழியர்களுக்கு முடிவடைந்ததும், அடுத்தகட்ட ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை பல முறை நடத்தப்பட்டது.
ஆனால் அதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.நேற்று 2–வது நாளாக நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் 272 வங்கி கிளைகள் உள்ளன.
இந்த வங்கிகளில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பண பரிமாற்றம் செய்ய முடியாததால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.வரைவோலை, காசோலை போன்றவைகளை எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்.
பெரும்பாலான ஏ.டி.எம்.மையங்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில், நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கன் தலைமை தாங்கினார்.
வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த கணபதிராமன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ராம்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வங்கி தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment