உலகின் சிறந்த கேப்டனின் (தோனி) தலைமையின் கீழ் செயல்படும் அணி சிஎஸ்கே..! நாங்கள்லாம் ஒரே குடும்பம் …..

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று  கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரதாரர்களில் ஒருவராக “இக்விடாஸ்’ நிதி நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் அதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களான முரளி விஜய், டுவைன் பிராவோ பங்கேற்றனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் டுவைன் பிராவோ, “இந்த ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்றபோது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். மீண்டும் சென்னை அணியிலேயே இடம்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஏனெனில், சிஎஸ்கே எப்போதும் ஒரு குடும்பம் போன்ற உணர்வைத் தருவது.ஐபிஎல் போட்டிக்குப் பிறகும் வீரர்கள், அணி நிர்வாகத்தினர் தொடர்பில் இருப்போம். சிஎஸ்கே ரசிகர்களின் அன்பும் ஒரு காரணம். அதுதவிர உலகின் தலைசிறந்த கேப்டன் தோனியின் கீழ் விளையாடுவது சிறப்பான ஒன்றாக இருக்கும்.

பிக்பாஷ் போட்டிக்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வு எடுத்துக் கொண்டேன். சென்னை அணிக்கு விளையாட உடலளவிலும், மனதளவிலும் என்னை தயார்படுத்திக் கொண்டேன்.முரளி விஜய் உள்பட, முன்பு அணியில் இருந்த வீரர்கள் தற்போதும் சென்னை அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சீசனை சிறப்பாக விளையாட எதிர்நோக்கியிருக்கிறோம்.

டி20 கிரிக்கெட், போட்டித் தன்மையோடு சிறந்த பொழுதுபோக்காகவும் இருப்பதால்தான் ரசிகர்கள் மைதானம் நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். நாங்கள் (மே.இ.தீவுகள் வீரர்கள்) இயற்கையாகவே கலகலப்பானவர்கள். எனவே, எங்கள் வீரர்கள் அனைவருமே உற்சாகத்துடனேயே விளையாடுகிறோம். எனினும், போட்டியில் வெல்வதே எங்களது நோக்கமாக இருக்கும்.நெஹ்ரா போன்ற சீனியர் வீரர்கள் இல்லை என்றாலும், ஜடேஜா, ஷேன் வாட்சன் உள்ளிட்ட இதர வீரர்களால் பணிச்சுமை இருப்பதாகத் தெரியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டில், டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்துப் போட்டிகளுக்கும் அவற்றுக்கான தனித்தன்மை உள்ளது. ஒன்றால், மற்றொன்று பாதிக்கப்படாது என நினைக்கிறேன்.மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றதில் மகிழ்ச்சி. அந்த அணியில் எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment