உயிரின் விலை ரூ.20 லட்சம் தானா? – தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

உயிரின் விலை ரூ.20 லட்சம் தானா? – தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனவும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையால் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகையை அதிகப்படுத்த வேண்டும், துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தலைமை செயலர், உள்துறை செயலர், ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 14 மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆலை மூடப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரு உயிரின் விலை ரூ.20 லட்சம் தானா? மனித மதிப்பை கணக்கிட முடியாது என்றனர்.

வைகோ சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பலனளிக்காது. இந்த அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றம் சென்றால் தடையாணை பிறப்பிக்க அதிக வாய்ப்புள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தெளிவாக இல்லை. ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இது ஆலையை மூடுவதற்கு தீர்வாக இருக்காது.

பொதுமக்களும் இந்த ஆலையால் தண்ணீர், காற்று மாசுபடுவது மட்டும் இல்லாமல் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்வது மாநில அரசு சம்பந்தப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டதால் ஆலைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 48 ஏ-ன் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். அப்படி ஒரு நிலை எடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும். பொதுமக்களின் நலனுக்காக இந்த முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அரசிடம் தெரிவித்து, அது தொடர்பாக அரசின் முடிவை நீதிமன்றத்துக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

பின்னர், அனைத்து வழக்குகளும் வரும் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *