இலங்கை அணி படுதோல்வி…ஏமாற்றத்துடன் விடைபெற்றார் ஹெராத்…!!

இலங்கை அணி படுதோல்வி…ஏமாற்றத்துடன் விடைபெற்றார் ஹெராத்…!!

காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 6–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 342 ரன்களும், இலங்கை 203 ரன்களும் எடுத்தன. 139 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 462 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. 8 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்கத்தை தொட்டாலும் யாரும் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. அதிகபட்சமாக மேத்யூஸ் 53 ரன்களும், குசல் மென்டிஸ் 45 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியுடன் ஓய்வு பெற்ற ஹெராத் (5 ரன்) கடைசி விக்கெட்டாக ரன்–அவுட் ஆனார்.

முடிவில் இலங்கை அணி 85.1 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி 4 விக்கெட்டுகளும், ஜாக் லீச் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். காலே மைதானத்தில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு இங்கு ஆடிய 4 டெஸ்டுகளில் 2–ல் தோல்வியும், 2–ல் ‘டிரா’வும் கண்டு இருந்தது. அது மட்டுமின்றி கடந்த 14 வெளிநாட்டு டெஸ்டில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றியும் இது தான்.

கேப்டன்கள் கருத்து

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய விதம் மிகவும் பெருமை அளிக்கிறது. முதலாவது இன்னிங்சில் விக்கெட் கீப்பர் பென் போக்சும் (107 ரன்), ஜோஸ் பட்லரும் (38 ரன்) அற்புதமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தொடக்கத்தில் ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக காணப்பட்டதால் வேகமாக ரன்கள் சேர்க்கும் முனைப்புடன் ஆடினோம். பின்வரிசை வீரர்களின் பங்களிப்பு நல்ல ஸ்கோரை எட்ட உதவியது. இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஹெராத்தின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தேன். அடுத்த டெஸ்டில் அவர் இல்லை என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.’ என்றார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் சன்டிமால் கூறுகையில், ‘இது அருமையான ஆடுகளம். எங்களது பேட்டிங் மோசமாக இருந்தது. இது போன்று பேட்டிங் செய்தால், வெற்றி வாய்ப்பு கிடைக்காது. எல்லா சிறப்பும் இங்கிலாந்து வீரர்களையே சாரும். முதலாவது இன்னிங்சில் பென் போக்சும், ஜோஸ் பட்லரும் அபாரமாக ஆடினர். அவர்களது விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்த கடுமையாக முயன்றும் பலன் கிட்டவில்லை. அவர்கள் எல்லா வகையிலும் எங்களை வீழ்த்தி விட்டனர். இலங்கை கிரிக்கெட்டுக்கு ஹெராத் எந்த அளவுக்கு பங்களிப்பை அளித்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். இது மிகவும் உணர்வுபூர்வமான நாளாக அமைந்தது. ஆனால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.

விடைபெற்றார், ஹெராத்

ஆட்டம் முடிந்ததும் ஹெராத்தை இலங்கை வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தில் வலம் வந்தனர். 40 வயதான ஹெராத் 1999–ம் ஆண்டு இதே மைதானத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் ஆடினார். தற்போது அதே இடத்திலேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். இருப்பினும் தோல்வியால் ஏமாற்றத்திற்கு உள்ளானார். இந்த டெஸ்டில் அவர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஹெராத் இதுவரை 93 டெஸ்டுகளில் விளையாடி 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடக்கை பவுலர் என்ற பெருமையுடன் விடைபெற்ற ஹெராத் கூறுகையில், ‘இது எனக்கு உணர்வுபூர்வமான தருணமாகும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறேன். இலங்கை அணிக்காக விளையாடியது மிகப்பெரிய கவுரவமாகும். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. அடுத்து சில உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். நான் வங்கியில் பணியாற்றி வருகிறேன். அந்த பணியை தொடர்ந்து செய்வேன்’ என்றார்.இங்கிலாந்து–இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி வருகிற 14–ந்தேதி பல்லகெலேவில் தொடங்குகிறது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *