இன்றுமுதல் சீசன் கன்னியாகுமரியில் ஆரம்பம்!

கன்னியாகுமரியில், தினமும்  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமான அளவில் வந்துசெல்கின்றனர்.ஆனால் இங்கு, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்று இருந்தாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில்தான் கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாகக் காணப்படும். இதை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா சீசன் காலம் என்று சொல்வார்கள். சபரிமலை மண்டல பூஜைக்காக வரும் பக்தர்கள், கன்னியாகுமரிக்கும் வருவார்கள். டிசம்பர் மாதத்தில் பள்ளிக்கூடங்களில் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவு இருக்கும்.
அதுபோல,வருடத்தின் முதல் மாதமான ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை மகர விளக்கு தரிசனத்தை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இங்கு இருக்கும். அதனால், இந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மூன்று மாதங்களிலும் அதிகமான கூட்டம் இருக்கும். இந்த ஆண்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் இன்று தொடங்குகிறது. இந்த சீசன், ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை நீடிக்கும். இந்த சீசன் காலத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும், கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட முடிவு செய்துள்ளது. கழிப்பறை, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் தீவிரமாகச் செய்யப்படவும் உள்ளன.இதற்காக மேலும், கூடுதலாக 50 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சுழற்சி முறையில் துப்புரவுப் பணியில் ஈடுபடுவார்கள் என பேருராட்சி நிர்வாகம்  முடிவு செய்துள்ளது.
சூரியன் உதியமாகும் இடம் மற்றும் கடற்கரைப் பகுதியில், கழிப்பறை வசதிகள் மற்றும் கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி பகுதியில் நான்கு இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அதுபோல, 9 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட உள்ளது. கடற்கரைப்பகுதி, சன்னதி தெரு, காந்தி மண்டபம், மெயின் ரோடு ஆகிய பகுதிகளில், கூடுதலாக குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடற்கரைச் சாலை பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி சீசன் காலத்தில் ஒட்டி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக 623 கடைகள் ஏலம் விடப்பட்டன. அதில் 594 சீசன் கடைகள் மட்டுமே ஏலம் போனது. இதன்மூலம், பேரூராட்சிக்கு 1கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 277 ருபாய் வருமானம் கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில், சீசன் காலத்தை முன்னிட்டு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு வழக்கம்.ஆகையால் பாதுகாப்புப் பணிகளுக்காக, 250-க்கும் மேற்பட்ட போலீஸாரும் ஊர்க்காவல் படையினரும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக கன்னியாகுமரி நகரம் காத்திருக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment