இந்திய கிரிக்கெட்  அணிக்கு ஆறுதல் அளித்த ஐசிசி டெஸ்ட் தரவரிசை!

 இந்திய கிரிக்கெட்  அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 125 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2016-17ம் ஆண்டு சீசனில் இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணி 5 புள்ளிகளை இழந்து 112 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 13 ஆக உள்ளது.

ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று 106 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி 102 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 98 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இலங்கை அணி 94 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 86 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன. வங்கதேச அணி 75 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் 5 புள்ளிகளை இழந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 67 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஜிம்பாப்வே அணி 10-வது இடம் வகிக்கிறது.

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் வரும் மாதங்களில் மேலும் இரு அணிகள் இடம் பெற உள்ளன. முழு நேர டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் தங்களது அறிமுக டெஸ்ட்டில் களமிறங்க உள்ளன. அயர்லாந்து தனது அறிமுக டெஸ்ட்டில் வரும் 11-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. ஆப்கானிஸ்தான் வரும் ஜூன் 14-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment