இந்தியகடற்படையில் முதல் பெண் பைலட்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கடற்படை கமாண்டோ  மகள் சுபாங்கி சொரூப் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள கண்ணூரில்  “எழிமலா நேவல் அகாடமி”  பயிற்சி மையத்தில் கடற்படை  பயிற்சியை பெற்றார்.

அதேபோல் இதே பயிற்சி மையத்தில் படித்த மூன்று பெண்கள் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் ஆவர்.

இவர்கள் அனைவரும் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சுபாங்கி சொரூப் என்பவர் விரைவில் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் பேசும்போது, ‘பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது’ என்றார்.

கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:-

சுபாங்கி கடற்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கடற்படையின் விமான போக்குவரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.

என்.ஏ.ஐ. கிளை கடற்படையின் ஆயுதங்கள், தளவாடங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்புடையது. தேர்வாகியுள்ள 4 பெண்களும் பணியில் சேருவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளில் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள். சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெறுவார். இங்கு தான் முப்படையின் பைலட்டுகளும் பயிற்சி பெறுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment