ஆளில்லா விமானம் : இந்தியா மன்னிப்பு கூற வேண்டும் என சீனா கூறியுள்ளது

ஆளில்லா விமானம் : இந்தியா மன்னிப்பு கூற வேண்டும் என சீனா கூறியுள்ளது

சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லையில் இந்தியா, சீனா, பூடான் என மூன்று நாடுகளும் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி சாலைப்பணிகளை மேற்கொண்டது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. சீனா, இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்திய ராணுவம் மீது போர் தொடுக்கப்போவதாக சீனா மிரட்டியது . இதனால் சிக்கிம் மாநில எல்லையில் இரண்டு மாதம் போர்ப்பதற்றம் நீடித்து வந்தது.

பின்னர், இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து டோக்லாமில் இரு நாடுகளும் தாங்கள், தங்கள் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொண்டன. பிறகு அங்கு போர்பதற்றம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று சீன நாட்டு எல்லைக்குள் சமீபத்தில் ஊடுருவி பின்னர் அது சீன எல்லைக்குள்ளே சிக்கிம் பகுதியில் நொறுங்கி விழுந்ததாகவும் சீனா இந்தியா மீது புகார் கூறியது.

இது குறித்து இந்தியா சார்பில் விளக்கம் அளித்த ராணுவ அமைச்சகம் தனது அறிக்கையில், ‘இந்தியாவின் ஆளில்லா விமானம், இந்திய பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. சிக்கிம் செக்டாரில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்றுவிட்டது. வழக்கமான நடைமுறைப்படி, இதுபற்றி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சீனாவுக்கு தெரியப்படுத்தி, அதை கண்டறியுமாறு கூறினர்’ என்று கூறப்பட்டிருந்தது.

இது குறித்து சீனா ஊடகமான குளோபல் டைம்ஸ் ‘இந்தியா ஆளில்லா விமான ஊடுருவலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி உள்ளது. மேலும் ஆளில்லா விமானத்தை இழந்ததை விட மோசமா விளைவுகளை இந்தியா சந்திக்கும் என கூறி உள்ளது.

அந்த செய்தியில் கூறியிருப்பது, ‘சீனா மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையே நீண்ட காலத்திற்கு முன்னர் பிரச்சினை ஏற்பட்ட அதே இடத்திலேயே இந்த ஊடுருவல் நிகழ்ந்தது உள்ளது.
மிகுந்த கவனத்துடன் இருபுறமும், இரு தரப்பினரும் செயல்பட வேண்டும். ஆனால் இந்தியா தெளிவாக நடந்து கொள்ளவில்லை.

இது ஒரு தொழில்நுட்ப சிக்கலாக இருந்தாலும்,ஏன் தவறான இடத்தில் தவறான நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் நடக்கிறது? ஒரு தொழில்நுட்ப தோல்வி காரணமாக ஒரு சீன ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் பறந்து சென்றால்,அத்தகைய சம்பவம் வெறும் விபத்து என்று இந்தியா விளக்கத்தை ஏற்குமா? ‘என செய்தி வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *