ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்.!திருத்தணி அருகே பரபரப்பு..!

திருத்தணியை அடுத்த தும்பிகுளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணக்கு ஆசிரியர் சரிவர வகுப்புக்கு வருவதில்லை என்று கடந்த ஆண்டு மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், திருத்தணி உதவி தொடக்க கல்வி அலுவலரிடமும் புகார் மனு கொடுத்து இருந்தனர்.

அப்போது கணக்கு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் வகுப்புக்கு சென்ற போது குற்றம் சாட்டப்பட்ட கணக்கு ஆசிரியர் மீண்டும் வகுப்புக்கு வந்தார்.

இதனை அறிந்த மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்று உள்ளனர். அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment